தமிழர் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இல்லத்திலேயே புழங்குப்பொருட்கள் காட்சியத்தை அமைத்துள்ள குடும்பத்தினர்!

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க பத்தாயிரம் நூல்கள் கொண்ட இலவச நூலகமும், பசிப்பிணி போக்க அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும் இல்லத்தின் முகப்பிலேயே வைத்துள்ளார்கள்.

மேலும் உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்யும் மனிதநேய பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். புழங்கு பொருட்கள் காட்சியகத்தில் உள்ள சங்கிலி நில அளவை
குறித்து திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத், முதுகலை மாணவர் சே. பிரான்சிஸ் ஆன்டனி, இளங்கலைத் தமிழ் மாணவர் ச.ஆசிக் டோனி உள்ளிட்டோர் பார்வையிட்டுகேட்டறிந்தனர்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சங்கிலி நில அளவை குறித்து பேசுகையில், சங்கிலி நில அளவை என்பது நிலத்தின் பரப்பளவை அளவிடப் பயன்படும் ஒரு முறையாகும். இது பொதுவாக நில அளவையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

சங்கிலி என்பது ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட அலகு. இந்த சங்கிலியைப் பயன்படுத்தி நிலத்தின் நீளம் மற்றும் அகலத்தை அளந்து, அதன் மூலம் நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடலாம். ஒரு சங்கிலி 66 அடி அல்லது 22 கெஜம் நீளம் கொண்டது. இது 100 இணைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நில அளவையில், சங்கிலி மற்றும் அதன் இணைப்புகளைப் பயன்படுத்தி நீளத்தை அளந்து, நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடலாம்.இது ஒரு பழமையான அளவீட்டு முறையாகும். இந்த அளவீட்டு முறை தற்போது வழக்கொழிந்து வருகிறது. நவீன நில அளவையில், நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *