திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும், உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்கள்.

இல்லத்தின் முகப்பிலேயே வைத்துள்ள புழங்கு பொருட்கள் காட்சியகத்தில் பத்தாயம் என்ற மரத் தொம்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புழங்கு பொருட்கள் காட்சியகத்தை
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத், முதுகலை மாணவர் சே. பிரான்சிஸ் ஆன்டனி, இளங்கலைத் தமிழ் மாணவர் ச.ஆசிக் டோனி
உள்ளிட்டோர் பார்வையிட்டு பத்தாயம் குறித்து கேட்டறிந்தனர்.

பத்தாயம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், பத்தாயம் அல்லது மரத் தொம்பை என்பது தானியங்களைச் சேமித்து வைக்கும் மரத்தால் செய்யப்பட்ட கொள்கலனாகும். இது உயரமான மரப்பெட்டி போன்ற தோற்றம் அளிக்கும். பொதுவாக, இது நான்கடி அகலமும், ஆறடி உயரமும் இருக்கும். பலகை பூவரசு, பலா, மாமரங்களின் துண்டு பலகைகளில் வெட்டி எடுக்கப்பட்டவை ஆகும். இவற்றை இணைத்து ஆங்காங்கே, தகடுகளை ஒட்டி, ஆணி அடித்திருப்பார்கள்.

தானியங்களைப் பெற கீழே சிறு வாயில் ஏணியின் துணையுடன் மேலே ஏறி, தானியங்களைக் கொட்டுவர்.
தமிழ்நாட்டில் காணப்படும் பத்தாயங்கள் பெரும்பாலும் மாம்பலகை, பலாப்பலகையில் செய்யப்பட்டவை ஆகும். இவை சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இரு வடிவங்களில் 10 முதல் 12 அடிவரை உயரம் கொண்டதாக இருக்கும். இவை தனித்தனி அடுக்குப் பெட்டிகளாகச் செய்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டவையாக இருக்கும்.

இதன் அடுக்குகளை பிரிக்க இயலும் இதற்கான காரணம், இந்த உயரமான பத்தாயத்தின் உச்சிக்குச் சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லைக் கொட்டுவது கடினம் என்பதால்.ஒவ்வொரு அடுக்காக வைத்து எளிதாக நெல்லை நிரப்ப இந்த ஏற்பாடு. இதன் மேலே, மூட ஒரு கதவு இருக்கும். அடிப்பகுதியில் தேவையான அளவு கம்பையோ, கேழ்வரகையோ, நெல்லையோ எடுத்துக்கொள்ள வசதியாக சிறிய ஒரு துளை இருக்கும்.

அதில் நெல் வரகு கம்பு என்று தானிய வகைகளைக் சேமித்து வைப்பார்கள். வயலும் வயல் சார்ந்த ஊர்களில் பத்தாயம் அதிகம் காணப்படும். அதிகளவிலான தானிய விளைச்சல் இருந்தால், அவற்றை விற்ற பின்னர், வீட்டுப் பயன்பாட்டிற்காக, பத்தாயத்தில் சேமித்து வைப்பர்.

தானியங்களை பூச்சிகள் அண்டாமல் இருக்க, மருந்து செடிகளின் இலைகளைக் கலந்து வைப்பர். தற்காலத்தில், அதிகம் பயன்படாத வீட்டு உபயோகப் பொருட்கள் பத்தாயத்தில் வைக்கப்படுகின்றன.

நெல்லைக் கொட்டுவதற்கும், எடுப்பதற்கும் வசதியாக, வீட்டின் கொல்லைப் புறத்தில் பத்தாயம் அமைப்பர். நெற்களஞ்சியமாகிய பத்தாயம், குதிர் என்பதன் வளர்ச்சி. குதிர் வைக்கோல் பிரியால் சுற்றப்பட்டு மண் பூசப்பட்டதாகும். குதிர் வட்டமாக இருக்கும். சங்ககாலத்தில் தமிழர்கள் தானியங்களை குதிரில் கொட்டிவைப்பார்கள். வீட்டின் முன்னே இருந்த முன்றிலும், வீட்டின் உள்ளே இருந்த முற்றத்திலும் குதிர் இருந்தது பற்றி பாடல்கள் உள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *