தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த குட்டூர் கிராமத்தைச் சார்ந்த சிவக்குமார் மகன் சிறுவன் நவீன் (3), தாத்தா சின்னசாமியுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது சிறுவனுக்கு பால் வாங்கி கொடுத்து, பேருந்து நிலைய இருக்கையில் அமர வைத்துவிட்டு, சின்னசாமி அருகில் உள்ள செல்போன் கடைக்கு சார்ஜர் வாங்குவதற்காக சென்று உள்ளார்.
ஆனால் சிறுவன் தாத்தாவை தேடிக் கொண்டு சென்றுள்ளான். இந்த நிலையில் கடைக்கு சென்று திரும்பி வந்த சின்னசாமி, பேருந்து நிலையத்திலிருந்து இருக்கையில் சிறுவன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அலறியடித்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார்.
ஆனாலும் சிறுவன் கிடைக்காததால், தனது மகன் சிவகுமாருக்கு சிறுவனை காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளார். இதனை எடுத்து சிவக்குமாறும் பேருந்து நிலையத்திற்கு வந்து சிறுவனை தேடி அலைந்து உள்ளார். ஆனால் சிறுவன் கிடைக்காததால் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதில் அடுத்து காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்த, எஸ்ஐ சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது பேருந்து நிலையத்திலிருந்து சந்தை வழியாக சிறுவன் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து காவல் துறையினர் பேருந்து நிலையத்திற்கு வெளியில் உள்ள சந்தை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது சந்தை வழியாக நடந்து சென்ற சிறுவனை காவல் துறையினர் மீட்டு, சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனை காணவில்லை என்று புகார் கிடைத்த அரை மணி நேரத்தில் சிறுவனை மீட்டு கொடுத்ததால், காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.