சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை 32வது முறையாக 100 அடியை எட்டியது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பவானிசாகர் அணை தற்போது 100 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது.
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மன்னனையான இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று பவானிசாகர் அணை 32 வது முறையாக 100 அடியை ஏட்டியுள்ளது.
வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சுமார் 18000 கன அடிக்கு மேல் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் தற்போது பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் சார்பில் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொட்டம் பாளையம், முடுக்கந்துறை, தத்தப்பள்ளி, சத்தியமங்கலம், போன்ற பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு பவானி ஆற்றில் இறங்கி யாரும் குளிக்க வேண்டாம் எனவும் துணி துவைக்க வேண்டாம் எனவும் பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.