வக்ஃபு சொத்து எனக்கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு எம்.அகரம் கிராம பொதுமக்கள்
மங்கலம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம்

விருத்தாசலம்
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் பூமாலை. இவர், மேற்படி கிராமத்தில், சர்வே எண்:111/2-ல், மூன்றரை சென்டில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டினை, தனது மகன் கார்த்திகேயன் என்பவருக்கு தான செட்டில் செய்து தருவதற்காக வேண்டி, நேற்று முன்தினம் மங்கலம்பேட்டை சார்-பாதிவாளர் அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் பதிவுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது, மங்கலம்பேட்டை சார்-பதிவாளர் ராஜபிரபு, மேற்படி சர்வே எண்ணில் உள்ள 11 ஏக்கர் 30 சென்ட் சொத்தானது பதிவுத்துறை ஆவணத்தில் வக்ஃபு வாரியம் என உள்ளதாக கூறியதாகவும், அதனால், பூமாலை கொண்டு வந்த ஆவணத்தை அவர் பதிவு செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சர்வே எண்: 111/2 மட்டுமல்லாமல் இதர சில சர்வே எண்களில் சம்பந்தபட்ட நிலமும் வக்ஃபு வாரியம் என்று இருப்பதாகவும், அதனை ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து முன்னணி பிரமுகர் வேல்முருகன் தலைமையில், பா.ஜ.க., ஒன்றிய தலைவர் பரமசிவம், இந்து முன்னணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன், பேரூர் தலைவர் மணிகண்டன், செயலாளர் தர்மராஜ், பூமாலை, சிபி, புருஷோத்தமன், தமிழ்செல்வன், தண்டபாணி, ஜெயக்குமார், வெங்கடேசன் மற்றும் எம்.அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலை 11 மணியளவில், மங்கலம்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, உள்ளே சென்று, அங்கு தரையில் கீழே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு மதியம் 2 மணி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, மாவட்டப் பதிவாளர் மகாலட்சுமி,
உதவி ஆய்வாளர் ராஜ்குமார்,
தனிப்பிரிவு தலைமைக் காவலர் வெங்கடேசன், உளவுப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜவேல், எம்.அகரம் கிராம நிர்வாக அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சார் பதிவாளர் ராஜ பிரபு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு வார காலத்திற்குள் அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, நேற்று மதியம் சுமார் 3 மணிவரை எந்த ஒரு ஆவணப் பதிவும் நடைபெறாமல் பதிவுப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *