சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு கோவையின் முக்கிய பிரமுகர்களால் வெளியிடப்பட்டது
கோயம்புத்தூர்
சட்டத் துறை, அரசியல், கூட்டுறவு இயக்கங்கள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சேலத்தைச் சேர்ந்த மாமனிதரும், மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய சகாவுமான ‘சுதந்திர செம்மல்’, ‘பார்-அட்-லா’ ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாறு நூல் வியாழக்கிழமை அன்று வி.ஜ.எம் அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தை, கோயம்புத்தூர் பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர்; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன், மற்றும் ரூட்ஸ் குழும இயக்குநர் கவிதாசன் ஆகியோர் கோயம்புத்தூர் போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் வெளியிட்டனர்.
வி.ஜ.எம். மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் முன்னிலையில் இந்த புத்தகம் வெளியானது.
‘சுதந்திர செம்மல்’ பார்ட்-அட்-லா டி. ஆதிநாராயண செட்டியார், டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத்தின் கொள்ளுத்தாத்தா ஆவார். அவரது 150-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்த வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கெங்குசாமி, செல்லா ராகவேந்திரன், விஜய் கிருஷ்ணா, செல்வகுமார் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆதிநாராயண செட்டியார் எனும் மாமனிதர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 22 செப்டம்பர் 1874 அன்று பிறந்த சுதந்திரச் செம்மல் (Freedom Patriot) பாரட் லா. டி. ஆதிநாராயணன் செட்டியார் – சேலம் நகரின் முன்னணி தலைவர், மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய நண்பர், சட்டம், அரசியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்தவர்.
டி. பட்டாபிராம செட்டியாரின் மகனாக பிறந்தார். கும்பகோணத்தில் தொடக்கக் கல்வி முடித்து, மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். 1899ல் ஆதிலட்சுமி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். 1914ல் மனைவி, மகன் ராதாகிருஷ்ணனுடன் அயர்லாந்துக்குச் சென்று, டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் சட்டம் பயின்று, 1917ல் அயர்லாந்து பார்-க்கு அழைக்கப்பட்டார். 1919ல் இந்தியாவுக்கு திரும்பி மதராஸ் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தாலும், வழக்குரைஞர் பணியை விடுத்து பொது சேவையைத் தேர்ந்தெடுத்தார்.
அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்ட தேசியவாதி. சி. ராஜகோபாலாசாரியாருடன் நெருக்கமாகச் செயல்பட்டார். 1918ல் சேலத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டை (1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றது) ஒருங்கிணைத்தார்.
சேலத்தில் செட்டியார் அவர்களின் இல்லமாகிய பாரா மஹாலில் தங்கிய காந்தியடிகள் அவரது குழந்தைக்கு “சரோஜினி” என்று பெயரிட்டார். குழந்தையை எடை பார்ப்பது போல் கையில் தூக்கி ,”உங்கள் குழந்தையின் எடைக்கு ஈடாக என்ன தருவீர்கள் ?” என்று கேட்க செட்டியாரும்,” பொன் தருகிறேன்” என்று கூறினார். காந்தி அவரை செல்லமாகக் கடிந்து கொண்டு,”ஏழைகளை வாழ வைக்க கதர் ஆடை நெய்ய நூல் தருகிறேன் என்று கூறியிருந்தால் நான் இன்னும் மகிழ்ந்திருப்பேன்” என்று கூறினார்.
1919 ரோலாட் சட்ட எதிர்ப்பு ஹர்த்தால், ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியகிரகம், 1921 இல் வெல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்பு போன்ற தேசிய இயக்கங்களில் முன்னணி பங்காற்றினார். சிறைவாசமும் அடக்குமுறைகளும் அவரைத் தடுக்கவில்லை. மதராஸ் சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினராக (1923–1930) விவசாயிகளின் உரிமைகள், மதுவிலக்கு, கிராம முன்னேற்றம், கைத்தறி, கூட்டுறவு வளர்ச்சி ஆகியவற்றில் பாடுபட்டார்.
கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜனின் நெருங்கிய நண்பர் மற்றும் ஆதரவாளர். ராமானுஜன் இங்கிலாந்தில் இருந்து உடல் நலக்குறைவுடன் சென்னை திரும்பியபோது அவரை புகைவண்டி நிலையத்திலிருந்து தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று ஒரு மாத காலம் அங்கேயே அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
1919ல் சுப்பிரமணிய பாரதியார் காந்தியை சந்தித்த ஒரே நிகழ்வில் கலந்து கொண்டு, பின்னர் ஆங்கிலேய அரசு பாரதியின் படைப்புகளை தடைசெய்த போது அதை எதிர்த்துப் போராடினார் அப்படைப்புகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.
கூட்டுறவு & கிராம முன்னேற்றம்
1906ல் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியையும், 1909ல் சேலம் நகர வங்கியையும் தொடங்கினார். கிராம கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி, “சேலத்தின் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டார். பாசன வசதி, கடன் உதவி, உள்ளூர் தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தினார்.
ஆதிநாராயணன் செட்டியார் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்;
துணைத் தலைவர் – சேலம் தாலுகா வாரியம்; தலைவர் – சேலம் நகர வங்கி;
நிறுவனர் – சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி அவர் வகித்த பதவிகளில் சில. மதுவிலக்கு மற்றும் கிராம தொழில் வளர்ச்சியின் முன்னோடி
சேலத்தின் “பாரா மஹால்” எனும் அவரது இல்லம் தேசப்பற்று நடவடிக்கைகளின் மையமாக இருந்தது. தனது செல்வத்தின் பெரும்பகுதியை விடுதலைப் போராட்டத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் செலவிட்டார்.
1934ல் நடைபெற்ற அகில இந்திய சுவதேசி கண்காட்சியில் அவர் இந்தியா சுயநிறைவை அடைய வேண்டும் என்ற பார்வையை வெளிப்படுத்தினார் — உள்நாட்டு தொழில்கள், விலை நிலைத்தன்மை, வெளிநாட்டு இறக்குமதி குறைப்பு ஆகியவை அடிப்படையாக. இவை இன்றைய மேக் இன் இந்தியா கொள்கையுடன் ஒத்துப்போகின்றன.