செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஈரோடு மாவட்டம் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தினவிழா சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கப்பட்டு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. கனிஏழில் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் டி. கே. தாமோதரன், செயலாளர் கு. செந்தில்குமார், பொருளாளர் .சி. பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், கவிஞர். ஜி. சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்ட குணங்களையும் அதன் மூலமாக நாம் அடைந்த சுதந்திரத்தின் பெருமைகளையும் நினைவு கூர்ந்ததோடு நமது கொங்கு மண்டல சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத்தினையும் மாணவிகளுக்கு சிறப்பாக எடுத்துரைத்தார்.
சுதந்திர வீரர்களின் தியாகமான வாழ்க்கையே நமது தற்போதைய சுதந்திர வாழ்க்கைக்கும் நமது மகிழ்ச்சிக்கும் காரணமாகும் என்று எடுத்துரைத்தார் அடுத்த நிகழ்வாக இவ்விழாவின் மைய நிகழ்வான “பெண்கள் வேலைக்கு செல்வது குடும்பத்துக்கு சுகமா? சுமையா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் ஜி. சண்முகசுந்தரம் அவர்கள் நடுவராக அமர்ந்து மாணவிகள் இரு அணிகளாகி தங்களது வாதத்தினை முன்வைத்தார்கள்.
பெண்கள் வேலைக்கு செல்வது குடும்பத்திற்கு சுகமே! என்னும் தலைப்பில் வாதாடிய மாணவிகள் பெண்களினால் சமுதாயத்தில் உண்டான முன்னேற்றங்களை எடுத்துரைத்தனர்.
மேலும் பெண்கள் வேலைக்கு செல்வதனால் குடும்பங்கள் அடையும் உயர்வினையும் சமூகத்தின் உயர்ந்த போக்கினையும் சமூக முன்னேற்றத்தினையும் எடுத்து இயம்பினார்கள். அடுத்ததாக சுமையே! என்னும் தலைப்பில் வாதாடிய மாணவிகள் பெண்கள் வேலைக்குச் சென்றால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கூட தர முடியாத பனிச்சுமையோடு வாழ்வதையும் ,நாகரீக மாற்றத்தினால் ஏற்பட்ட விலைவாசி உச்சத்தையும் குடும்ப உறுப்பினர்களின் மனநிலைகள் வேறு திசையில் செல்வதாகவும் பெண்களுக்கான ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும் சுட்டி காட்டினார்கள்.
இந்நிலையில் பெரிதும் பெண்கள் வேலைக்குச் செல்வது குடும்பத் தேவைகளை கருதியே என்ற முடிவினை எடுத்துரைத்து பணி புரியும் பெண்கள் வேலைக்கு செல்வது வீட்டுக்கு சுகமே! என்ற தீர்ப்பை வழங்கினார்.
இதில் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர் .அடுத்த நிகழ்வாக மாணவிகளின் சுதந்திர தினத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக நவரசம் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் தி. சி. சியாமலவல்லி நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண் இசைக்கப்பட்ட விழா இனிதே நிறைவுற்றது