துறையூர் பகுதியில் 124 இடங்களில் விநாயகர் சிலை அரசு விதிகளை பின்பற்ற எஸ்ஐ முத்தையன் அறிவுறுத்தல்
துறையூர் ஆக-27
திருச்சி மாவட்டத்தில் துறையூர் காவல் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுமார் 124 இடங்களில் சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் முத்தையன் தெரிவித்துள்ளார்.
துறையூர் காவல் நிலையத்தில் கடந்த 22/08/2025 அன்று ஆகஸ்ட் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 84 இடங்களிலும், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 40 இடங்களிலும் விநாயகர் சிலை வைக்க முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் அனுமதி வழங்கப்பட்டதாக இன்ஸ்பெக்டர் முத்தையன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் படி விநாயகர் சிலையின் உயரம் பீடத்தில் இருந்து 10 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும். சிலை வைக்கும் மேற்கூரை தகரம் மற்றும் ஆஸ்பிடாஸ் சீட்டால் அமைக்க வேண்டும், சுழற்சி முறையில் இரண்டு நபர்களை நியமித்து சிலையை பாதுகாக்க வேண்டும், சிலையை காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் குறிப்பிட்ட வழிதடத்தில் எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் வரையறுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடங்களில் கரைக்க வேண்டும்.
அப்படி சிலை ஊர்வலம் எடுத்து செல்லும்போதும், கரைத்து விட்டு வரும் பொழுதும் பொது மக்களுக்கும்,பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்குமாறு நடந்து கொள்ளக் கூடாது,இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில் மசூதிகளை கடந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது.தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாண்பை நீதிமன்ற உத்தரவுப்படி விநாயகர் சதுர்த்தி விழாவில் களிமண்ணால் ஆன சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும்,
பொது இடங்களில் சிலை வைக்க நீதிமன்ற உத்தரவுப்படி மின்வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்,விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு சிலை அமைப்பாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும், அசம்பாவிதங்களுக்கு சிலை அமைப்பாளர்களே பொறுப்பாவார்கள் , சிலை ஊர்வலத்தின் போது மற்ற மதத்தினர் புண்படுமாறு கோஷம் எழுப்பக் கூடாது, கூம்பு வடடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது,
பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட அரசு விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் விதிகளின் படி நடந்து கொள்வதோடு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக சிலை அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.இதில் உதவி காவல் ஆய்வாளர்கள் தினேஷ், கருப்பண்ணன்,வடிவேல், ராஜதுரை, தங்கம், ரவிச்சந்திரன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு துறையூர் காவல் வட்டார அளவில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாக காவல் ஆய்வாளர் முத்தையன் தெரிவித்துள்ளார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்