தருமபுரி அருகே இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்றவர்கள் மீது அரசு நகர பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலி அதிர்ஷ்டவசமாக கணவனும் குழந்தையும் உயிர் தப்பினர். மற்றொருவர் கவலைக்கிடம்
தருமபுரி அடுத்த பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி(32) சென்னையில் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து நந்தினி (27) என்ற மனைவியும் தீரன் (3) என்ற ஆண் குழந்தையும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இன்று வீரமணி மனைவி, மகன் ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தருமபுரி வந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு திரும்பி செல்லும் போது தருமபுரி அடுத்த புரோக்கர் ஆபீஸ் அருகே முன்னாள் சென்ற கார் திடீரென இடதுபுறம் திரும்பியதால் காரில் மோதாமல் இருப்பதற்காக வீரமணி வலது புறமாக திருப்பி உள்ளார். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த நகர பேருந்து நிலையத்திலிருந்து காரிமங்கலத்திற்கு வந்து கொண்டிருந்த 23 என்ற நகரப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி உள்ளது அப்போது வீரமணியின் மனைவி நந்தினி மீது பேருந்து ஏறி இறங்கி உள்ளது. அதேபோல் முன்னாள் சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அதில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நகர காவல் துறையினர் படுகாயம் அடைந்த நபரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நந்தினியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வீரமணி மற்றும் அவரது மூன்று வயது குழந்தை தீரன் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர் பாடி அருகே உள்ள மூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து (51) என்பது தெரியவந்தது. மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.