தென்காசி,

தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை சார்பாக சிறப்பான முறையில் அஞ்சல் சேவை வழங்கிய அஞ்சல் கோட்டங்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி சங்கரன்கோவில் அடங்கிய கோவில்பட்டி கோட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை அலுவலகம் சார்பாக கடந்த 2024-2025 ஆம் நிதியாண்டு மற்றும் 2025-26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சிறப்பான முறையில் அஞ்சல் சேவையை வழங்கிய அஞ்சல் கோட்டங்களை கெளரவிக்கும் விதமாக விருது வழங்கும் விழா சென்னைவில் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சல் கோட்டங்களுக்கு அந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 3 தலைமை அஞ்சலகங்களையும், 61 துணை அஞ்சலகங்களையும், 280 கிளை அஞ்சலகங்களை யும் உள்ளடக்கிய கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கியது, பொதுமக்க ளுக்கான ஆதார் சேவை, கிராமிய அஞ்சலகங்களின் செயல்பாடு, பள்ளி மாணவ மாணவியர்களை தபால் தலை சேகரிப்பு தொடர்பான தேர்விற்கு ஊக்கப்படுத்தியது போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் வழங்கினார். விழாவில் தெற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி மற்றும் தெற்கு மண்டல அஞ்சல் துறை இயக்குனர் ஆறுமுகம் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். விருதுகளை கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பெற்றுக்கொண்டார்.

விருதுகளை பெற்ற கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பில் கூறியதாவது: கோவில்பட்டி அஞ்சல் கோட்டமானது, தென்காசி மாவட்டம் முழுவதும் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அஞ்சல் சேவையை அளித்து வருகிறது. சிறப்பாக செயல்பட்டு அதிக விருதுகளை பெற காரணமாக இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் அஞ்சல் சேவை தொடர்பான எவ்வித சந்தேகங்கள், புகார்கள், ஆலோசனைகளை தம்மிடம் நேரிலோ, 04632-221013 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது செ. சுரேஷ் குமார் அஞ்சலக கண்காணிப்பாளர், கோவில்பட்டி அஞ்சல் கோட்டம் , கோவில்பட்டி -628501 நேரடியாகவோ எழுதி அனுப்பலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *