பொள்ளாச்சி, செப். 3- உலக தென்னை தினத்தை முன்னிட்டு
பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உலக தென்னை தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. தென்னை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சுதாலட்சுமி வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் வெங்கடேசன் தலைமையேற்று பேசுகையில், தென்னை சாகுபடியில் பூப்பூக்கும் தருணத்தில் வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக பூக்களின் வீரியத்தன்மை குறைந்து விடுகிறது. இதனால் கடும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மேலும் கேரள வாடல் மற்றும் வெள்ளை பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக தென்னந்தோப்புகளில் ஊடுபயிர்களாக மங்குஸ்தான், ஜாதிக்காய், கோகோ, குறுமிளகு, ரம்புட்டான் போன்ற பயிர்களை பயிரிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென்னை சார்ந்த தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சித்தார்த்தன்,தென்னையில் பழப் பயிர்கள் சாகுபடி குறித்து கேரள மாநிலம் காஞ்சிராப்பள்ளியில் உள்ள ஹோம் கிரவுன் பயோடெக் நிறுவனத்தின் பொது மேலாளர் சைஜீலூக்கோஸ், தென்னைக்கேற்ற கலப்புப் பயிர்கள் குறித்து வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் அக்ஸிலியா, தென்னந்தோப்பில்
அரிதான பயிர்கள் சாகுபடி குறித்து முன்னோடி விவசாயி காளிபிரகாஷ், தென்னையில்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி குறித்து வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் கீதா ஆகியோர் விளக்கங்களை அளித்தனர்.

ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் குட்டை, நெட்டை, ஆயிரம்காய்ச்சி. மலேயன் பச்சை குட்டை இளநீர் போன்ற ரகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *