தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஊதியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தாராபுரம், ஊதியூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரண்டாம்பாளையம், புங்கந்துறை ஆகிய ஊராட்சிகளுக்கு ஊதியூரில் உள்ள பழநி ஆண்டவர் பாதயாத்திரை குழு மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள், வேளாண்மைத் துறையின் சார்பில் காய்கறி விதைகள் மற்றும் இம் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில் சங்கரண்டாம்பாளையம், புங்கந்துறை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 703 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் எஸ்.சந்திரசேகரன் மற்றும் குண்டடம் பகுதியைச் சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.