திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் மோகனச்சந்திரன், பூண்டி கே. கலைவாணன் எம் .எல். ஏ. ஆகியோர் பார்வையிட்டு 15 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தமிழக அரசின் 2025-26 ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின் படி மருத்துவ வசதி குறைந்த, சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப்பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி, மருத்துவ வசதி குறைவாக உள்ள நகர்ப்புற பகுதி ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் நீரிழிவு, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலன், எலும்பியல் மருத்துவம், இதய நோய், மூளை, காது, மூக்கு, தொண்டை, தோல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ரத்த பரிசோதனை, மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், எக்ஸ்ரே, கதிரியக்கவியல் போன்ற அந்தந்த நோய்க்கான சிறப்பு டாக்டர்களின் துணையுடன் அனைவருக்கும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சேவை முகாம் மூலம் உயர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அசோக், சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயக்குமாரி, வலங்கைமான் தாசில்தார் ஓம் சிவகுமார், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமணி, முரளி உள்பட சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.