சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் சிலம்பொலியார் 96–ஆம் பிறந்த நாள் விழா நாமக்கல்–பரமத்தி சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் பி.கே.வெங்கடாசலம் வரவேற்றார்.
பிஜிபி குழும தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். நாமக்கல் தமிழ்ச்சங்க செயலாளர் கோபால.நாராயணமூர்த்தி விருதாளர்கள் அறிமுக உரையாற்றினார். இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் கலை கலாசார பீடம், இந்து நாகரிகத் துறை மேனாள் துறைத் தலைவர் பேராசிரியர் சாந்திகேசவனுக்கு ‘இளங்கோ விருது’ மற்றும் ரூ.50 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட்டது.
மேலும், நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவி ரா.அபர்ணாக்கு ‘சிலம்பொலியார் மாணவர் விருது’ மற்றும் ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட்டது.
நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் இரா.குழந்தைவேல், கம்பன் கழக தலைவர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் விருதாளர்களை வாழ்த்தி பேசினர். திருச்சி முனைவர் பட்ட ஆய்வாளர் வி.வீரபாலாஜி சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றினார்.
சிலம்பொலியார் குறித்து தமிழறிஞரான ‘மரபின்மைந்தன்’ முத்தையா பேசியதாவது: நாமக்கல்லின் பெருமைக்கு சான்றாக விளங்குபவர்கள் கவிஞர் வெ.ராமலிங்கம், மற்றொருவர் சிலம்பொலி செல்லப்பன். எவ்வாறு மேடையில் பேச வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்த தமிழறிஞர் சிலம்பொலியார். புலமைக்கு சிகரமானவர் மட்டுமல்ல, எளிமைக்கும் சொந்தக்கார மனிதராக விளங்கினார். அவர் மறைந்தபோது, இறுதி மேடைப்பற்றாளனையும் இறைவன் அழைத்துக் கொண்டானே என பெண் ஒருவர் கூறி வேதனைப்பட்டார்.
மரணத் தருவாயிலும் கம்பீரமாக வாழ்ந்த மனிதர். இலக்கியத்தை படித்துக் கற்றுக் கொண்டதைவிட, சிலம்பொலியாருடன் பழகி கற்றறிந்தே அதிகம் என்றார். இவ்விழாவில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ. காந்திச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் இரா.செழியன், பிஜிபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கணபதி, கம்பன் கழக செயலாளர் அரசு பரமேசுவரன், பேராசிரியர் உழவன் மா.தங்கவேலு மற்றும் சிலம்பொலியார் குடும்பத்தினர், தமிழறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிறைவில், சிலப்பதிகார அறக்கட்டளை தலைவர் செ.கொங்குவேள் நன்றி கூறினார்.