திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 14- வார்டுக்கு உட்பட்ட கோவில் பத்து பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து தீண்டாமை சுவற்றை கட்டிய நபர் மீது நடவடிக்கையும், பொதுப் பாதையை திறந்து விட வேண்டும், தீண்டாமை சுவற்றை அகற்றி விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
முன்னதாக பேரணி கடைவீதி அருகே வரும் போது காவல்துறையினர் பேரணியை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சித்தனர்.

காவல்துறையின் தடுப்பை மீறி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம் சென்று முற்றுகை போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சண்முகம், குடவாசல் லெனின், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகதீஸ்வரி, சிபிஎம் குடந்தை மாநகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட தோழமை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டத்தின் போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் மற்றும் சிபிஎம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார், காவல் துறை நன்னிலம் துணை கண்காணிப்பாளர் தமிழ் மாறன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் அக்.1ம் தேதி தீண்டாமை சுவர் அகற்றுவது சம்பந்தமாக ஆர்டிஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என உறுதிமொழி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள் நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.