தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா்,தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை
அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூய்மை காவலர்கள் ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு (அரசியல் சார்பற்றது) சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன், வடக்கு மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வரவேற்று பேசினார். மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கோரிக்கையாக தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். 1-6-2009 முதல் அரசாணை எண் 234 இன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் , பணிக்கொடை ரூ.1 லட்சம் வழங்கிட வேண்டும். என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.