துறையூரில் பெருமாளை தரிசிக்க பக்தர்களிடம் கட்டாய கட்டணம் இலவச தரிசனம் வேண்டும் இந்து முன்னணி தலைவர் சிவா கோரிக்கை
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை உச்சியில் உள்ள பெருமாளை தரிசிக்க கட்டாய வசூல் செய்ய கூடாது என இந்து முன்னணியினர் கோரிக்கை அளித்துள்ளனர். துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை மீது ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளில் “தென் திருப்பதி” என்று பக்தர்களால் போற்றப்படும் பிரசித்தி பெற்ற பெருமாள் மலை ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களிடம் பத்து ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் புகார்கள் தெரிவித்திருந்தனர்.ஆகவே கட்டாய கட்டணத்தை ரத்து செய்து சுற்றியுள்ள குடிப்பாட்டு மக்களையும், பக்தர்களையும் இலவச தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று இந்து முன்னணி சார்பாக இந்து முன்னணி நகர தலைவர் சிவா(எ)சிவபிரகாஷ் தலைமையில் துறையூர் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரிடம்
கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய இந்து முன்னணி தலைவர் சிவா, ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 5 சனிக் கிழமைகளிலும் பெரும்பாளை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.அவர்களிடம் வாகன கட்டணம்,அர்ச்சனை கட்டணம்,அபிஷேக கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம் என பக்தர்களை அரசு சிரமப்படுத்தி வரும் நிலையில், தற்போது மலையேறி சென்று பெருமாளை தரிசிப்பதற்கே கட்டாய கட்டணம் என்பது அநியாயமானது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.புரட்டாசி மாதம் என்பதால் பெருமாள் ஆலயத்திற்கு அதிக பக்தர்கள் வருவதால் ஆலயத்தை வியாபார கூடமாக மாற்றும் இந்து சமய அறநிலையத் துறை திருந்த வேண்டும். மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்யாமல் வசூலில் மட்டும் கவனம் செலுத்துவது இந்து கோவில்களை அழிப்பதற்கு சமம். அடுத்து வரும் சனிக்கிழமைகளில் மீண்டும் வசூல் வேட்டை நடத்தினால் பிறகு இந்து முன்னணி போராட்ட வேட்டை நடத்தும் என்று கூறினார்.இதில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்