திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் பா.போஸ், பொருளாளர் எஸ்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக, உலக தாரகை தமிழ்ச் சங்க நிறுவனர் சுகந்தீனா, இலங்கை திரைப்பட நடிகை நவயுக குகராஜா, ஸ்ரீ சாய் பிலிம்ஸ் நிறுவனர் டாக்டர் மாலதி நாராயண், ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். மேலும் புதுவை தமிழ்ச் சங்க செயலாளர் பாவலர் சீனு.மோகன்தாசு, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனர் எம்.ஏ.தாமோதரன், புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ர.ஆனந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, காஞ்சிபுரம் குமாரி ஹர்ஷி வஜ்ஜரவேல் குழுவினரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. மேலும் வந்தவாசி பகுதியில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆசிரியைகளுக்கு ‘அறிவுத் திருக்கோயில் விருது’ வழங்கப்பட்டது. அரூர் கலை நிலா குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகளிர் தின சிறப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் 214 அதிகாரங்கள், 2140 குறள் வெண்பா படைத்த தாரகைக் குறள் நூலாசிரியர் சுகந்தீனாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.