திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறுஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது . தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர் தர்மராஜ் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி பள்ளி மாணவர் விஷ்வா உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு குறித்து வரலாற்று குழு தலைவர் விஜயகுமார் பேசுகையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தி தலைமையில் 1930இல் தண்டியில் நடந்த உப்பு சத்தியாகிரகம் முக்கிய பங்கு
வகிக்கிறது. இதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில் தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. இதை சர்தார் வேதரத்னம் முன்னின்று நடத்தினார்.
திருச்சியில் இருந்து 1930 ஏப்ரல் 13.அன்று துவங்கிய நடைபயணத்தில் ராஜாஜியால் தேர்ந்தெடுக்கபட்ட நூறு காங்கிரஸ் தியாகிகள் இந்த அஹிம்சைப் போரில் கலந்துகொண்டார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கவர்கள் காமராஜர், ருக்மணி லட்சுமிபதி, எம்.பக்தவச்சலம், தினமணி ஏ.என்.சிவராமன், ஜி.ராமசந்திரன், கல்கி சதாசிவம், கோவை ஜி.கே.சுந்தரம், ஒ.வி.அளகேசன், வெங்கட்ராமன், கே.சந்தானம் மற்றும் ராஜாஜியின் மகன் சி.ஆர்.நரசிம்மன் ஆகியோர். 16 நாட்கள் நடைபயணம் செய்து வேதாரண்ய கடற்கரையை போராட்ட குழுவினர் சென்றடைந்தனர்.
அப்போதைய ஆங்கில அரசின் உத்தரவையும் மீறி, உப்பு சத்தியகிரக போராட்டக் குழுவினருக்கு வேதரத்னம் பிள்ளை இடம் அளித்தார். மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். இதனால் அவர் மீது ராஜதுரோகம் குற்றம் சாட்டி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ததுடன், ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையையும் ஆங்கிலேய அரசு விதித்தது. காலை ஆறு மணியளவில் ராஜாஜியும், மற்ற தொண்டர்களும் உப்பு அள்ளியவாறே வந்தே மாதரம், காந்திஜிக்கு ஜே என்று கோஷங்கள் எழுப்பினர்.
ராஜாஜி, காமராஜர், ருக்மணி லட்சுமிபதி மற்றும் இதர போராளிகளை கைது செய்த ஆங்கிலேய அரசு அவர்களுக்கு சிறை தண்டனை விதித்தது. 15 ஆகஸ்ட் 1973 கோபுர வடிவில் ஞாபக சின்னம் அமைக்கப்பட்டு நகர்மன்ற தலைவர் ரங்க நாதனால் திறந்து வைக்கப்பட்டது. முதல் கோபுரத்தில் கல்வெட்டு இந்நிகழ்வை எடுத்துரைக்கிறது.
13 ஏப்ரல் 1988 உப்பு சத்தியாகிரக பாதயாத்திரையை நினைவு கூறும் விழாவில் நூறு தொண்டர்கள் பங்கேற்ற யாத்திரையை இந்திய குடியரசு துணைத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, தமிழக ஆளுநர் அலெக்ஸாண்டர் முன்னிலையில் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு மற்றொரு கோபுரம் கட்டப்பட்டு கல்வெட்டும் இடம்பெற்றுள்ளது என்றார்.