பாலஸ்தீனில் காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலை, அநியாயங்களை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரும்புக்கடை பழைய டோல்கேட் பகுதியில் நடைபெற்றது.
காஸாவில் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதையும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாய்த் தள்ளப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள் மனிதாபிமான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாகவும் உரையாற்றிய பேச்சாளர்கள், இந்தியா உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி. முஹம்மது அய்யூப் பாகவி செய்தியாளர்களிடம் பேசும்போது,பாலஸ்தீனில் நடைபெறும் அக்கிரமங்களுக்கு எதிராக ஒவ்வொரு மனிதநேயம் கொண்டவர்களும் தங்கள் எதிர்ப்பைக் குரலால் பதிவு செய்ய வேண்டும். இதற்காக அனைத்து ஜமாஅத்களும், இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இந்திய அரசு இஸ்ரேலின் அராஜகத்தை கண்டிக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் செந்தில் வேல், பேராசிரியர் ஹாஜா கனி, முஹம்மது அமீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும், என்றும் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புக் குரலை பதிவு செய்தனர்.