ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சாத்தார் உடையார் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நேற்று மாலை நடைபெற்றது.
சென்ற வாரம் காப்பு கட்டுடன் இவ்விழா துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று இந்த புரவி எடுப்பு விழாவில் விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் கிராம பொது மக்கள் விதைநெல், களிமண்ணால் செய்யப்பட்ட 6 குதிரைகள், மற்றும் காளியம்மன், ஸ்ரீஅய்யனார், ஶ்ரீகருப்பண்ணசாமி, தவழும் பிள்ளை ஆகிய உருவ பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் இதனை தாரை தப்பட்டை, ஜிப்லாமேளம் மற்றும் வானவேடிக்கையுடன் பொதுமக்கள் தலையில் சுமந்தபடி பேரையூரில் இருந்து சேர்ந்தகோட்டை கிராமத்திற்கு 5 கிலோமீட்டர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் ஆட்டம் ஆடி புரவி எடுப்பு விழாவை கொண்டாடினர்.
இந்த புரவி எடுப்பு திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.