கத்தார் நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஓபன் சிலம்பம் போட்டியில் 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சென்னையை சேர்ந்த குளோபல் சிலம்பம் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கத்தார் நாட்டை சேர்ந்த ஆதிரன் சிலம்பம் சார்பாக கடந்த 3-ஆம் தேதி சர்வதேச ஓபன் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியா, கத்தார், ஓமன், சவூதி அரேபியா, மலேசியா, ஸ்ரீலங்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பதினோரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய அளவில் விளையாடிய சிலம்ப வீரர்கள் இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதனடிப்படையில், இந்தியா சார்பாக சென்னையை சேர்ந்த இரண்டு சிலம்ப பள்ளிகளை சேர்ந்த வீரர்கள், மற்றும் ஈரோடு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒரு சிலம்ப பள்ளி வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
தனித்திறமை, தனிச்சண்டை, குழு போட்டிகளில் வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில், சென்னை குளோபல் சிலம்பம் அகாடமியை சேர்ந்த 15 வீரர்கள் மொத்தமாக 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். புள்ளிகள் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் இந்தியா சார்பாக வென்றனர்.
வெற்றி பெற்று தாயகம் திரும்பிய வீரர்களை அவர்களது பெற்றோர் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.
இதுகுறித்து குளோபல் சிலம்பம் அகாடமியின் ஆசான் சுந்தர் கூறுகையில், கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அப்போது தங்களது வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அவர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை.
இருந்தாலும், இந்தாண்டும் நடைபெற்ற சர்வதேச போட்டியில் எங்களது வீரர்கள் பங்கேற்று வெற்றிபெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளனர். வீரர்களின் விமான கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அவர்களது பெற்றோர்களே ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோரின் பிள்ளைகள் பெரும்பாலானோர் இதில் பங்கேற்கவில்லை.
இந்த முறை மீண்டும் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறும்போது, தங்களது வீரர்களுக்கு தேவையான உதவிகளை மீண்டும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார்.