நாகப்பட்டினம்,மே.18-
திருமருகல் வட்டாரத்தில் பருத்தியில் பூ, காய்கள் உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


விளைச்சல் பாதிப்பு
பருத்தியில் பூ, மொட்டுகள் உதிர்வது இயற்கையான நிகழ்வுதான். அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால் விளைச்சல் மிகவும் பாதிக்கப்படும். பூ, மொட்டுகள், காய்கள் உதிர்வதன் காரணங்களை ஆராய்ந்து ஒருங்கிணைந்த முறையில் மேலாண்மை செய்து உயர் விளைச்சல் பெறலாம். தண்ணீர் பற்றாக்குறை அல்லது வறட்சி, அதிக தண்ணீர் அல்லது அதிக மழை, வினையியல் குறைபாடு, சமச்சீர் உரம் இடாதது, பூச்சி நோய் தாக்குதல், மகரந்த சேர்க்கையில் குறைபாடு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. பருத்தியில் பூ மற்றும் காய்கள் உதிர்தலுக்கு ஊட்டச்சத்து அல்லது ஹார்மோன்கள் அல்லது இரண்டும் கலந்த காரணங்கள் என்ற கருத்து நிலவுகிறது.


ஊட்டச்சத்து
ஊட்டச்சத்து காரணங்களில் கார்போ ஹைட்ரேட்கள் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் செடியில் பிஞ்சுக் காய்கள் உதிர்ந்து விடுகின்றன. அதாவது பயிரின் தேவைக்கேற்ப ஊட்டச்சத்து சரிவிகிதத்தில் இல்லை எனில் பூ காய்கள் உதிர்ந்து விடுகின்றன. ஊட்டச்சத்துகளின் குறைப்பாட்டினால் தான் ஹார்மோன்கள் சமநிலை இழந்து காய்கள் உதிர்ந்து விடுகின்றன. பருத்தியில் 100 முதல் 150 மொட்டுகள் உருவானாலும் அவற்றில் 25 முதல் 40 மொட்டுக்கள் மட்டுமே காய்களாக வளர்ச்சி பெற்று வெடிக்கிறது. மற்ற மொட்டுகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள் என பலநிலைகளில் உதிர்ந்து விடுகிறது,


மேலாண்மை முறைகள்
பருத்தியில் வினையியல் காரணங்களினால் பூக்கள் காய்கள் உதிர்ந்தால் வளர்ச்சி ஊக்கியை இலைவழி தெளிப்பு செய்வது மிக சிறந்தது. நாப்தலின் அசிட்டிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியை 40 பி.பி.எம். (ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி கிராம் என்கிற அளவில்) விதைத்தல் மற்றும் 90-ம் நாட்களில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.


நுண்ணூட்ட உரங்கள்
தேவைக்கேற்ப காய் பிடிக்கும் தருணத்தில் டி.ஏ.பி. 2 சதம் (இரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம்) மற்றும் பொட்டாசியம் குளோரைடு ஒரு சதம் (ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம்) கலந்த கரைசலை தெளிக்க வேண்டும். பூக்கும், காய்பிடிக்கும் மற்றும் காய் வளர்ச்சி ஆகிய முக்கிய பருவங்களில் மண்ணில் ஈரப்பதம் குறைந்து விடாமல் தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். அதிக மழைபெய்யும் காலங்கள். தண்ணீரை முழுவதும் வடித்து விட வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட அளவு பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட உரங்கள் இடவேண்டும். சூரிய ஒளி இலைகளின் மீது நன்கு படும்படியாக தேவையான அளவு பயிர் இடையான விட்டு விட்டு சாகுபடி செய்ய வேண்டும். இது போன்ற வழிமுறைகள் மூலமாக அதிக விளைச்சலும், கூடுதல் வருமானமும் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *