ஈரோட்டில் 150 ஜேசிபிகளுடன் 4 நாள் போராட்டத்தில் குதித்த எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள்..!

புதிய வாகனங்களின் விலை உயர்வு, டீசல் மற்றும் ஆயில் விலை ஏற்றம், உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் எர்த் மூவர்ஸ் தொழிலை பாதுகாக்கவும், இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை காக்கவும்

வாடகை கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு – பெருந்துறை சாலையில் உள்ள முத்து மஹால் அருகே நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜேசிபி உரிமையாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் தலைவர் எம்.கே. தங்கவேல் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தினேஷ்குமார், செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் பாலு, பொருளாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டீசல் மற்றும் ஆயில் விலை உயர்வு, சாலை வரி அதிகரிப்பு, ஜேசிபி வாகனங்களை இயக்கும் ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்கு ஏற்ற வகையில் ஜேசிபி வாடகை கட்டணத்தில் எந்த உயர்வும் வழங்கப்படவில்லை என சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் எர்த் மூவர்ஸ் தொழிலின் தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, வாடகை கட்டண உயர்வை உறுதி செய்யவும், டீசல், ஆயில் மற்றும் சாலை வரி உயர்வுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜேசிபி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் பங்கேற்று, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *