திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 15 பேரை முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருநெல்வேலி முன்னாள் மக்களவை உறுப்பினருமான சௌந்தரராஜன் தனது சொந்த செலவில் சென்னைக்கு விமானம் மூலம் சுற்றுலா அழைத்து வந்துள்ளார்.
கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளிலும், தனித்தனி பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவர்கள் இந்தச் சுற்றுலாவிற்குத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கடந்த கல்வியாண்டில் திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 4 மாணவர்களும் இணைக்கப்பட்டனர். இவர்களுடன் 3 ஆசிரியர்கள் என மொத்தம் 18 பேர் சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட மாணவர்கள், ஜூன் 28-ஆம் தேதி வரை சென்னையில் தங்கி பல்வேறு முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளனர். அண்ணா நூற்றாண்டு நூலகம், பிர்லா கோளரங்கம், அறிவியல் மையம், அரசு அருங்காட்சியகம், எம்.ஜி.எம். டிஸ்ஸி வேர்ல்ட், வி.ஜி.பி. அக்வாரியம் மற்றும் மகாபலிபுரம் உள்ளிட்ட சுற்றுலா மற்றும் கல்வி சார்ந்த இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கும் வசதி, உணவு, உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சௌந்தரராஜன் தனது சொந்த நிதியிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளார். சுற்றுலா நிறைவடைந்த பின்னர், மாணவர்கள் சென்னை எழும்பூரில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்தச் சுற்றுலாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர், தங்களது வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் பயணித்த அனுபவம் மறக்க முடியாததாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர். விவசாய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த தங்களுக்கு இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த சௌந்தரராஜனுக்கு நன்றியைத் தெரிவித்த அவர்கள், மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளதாக கூறினர்.
கல்வியில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.