கோவை

கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா – 2026 என்னும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. KPR கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி இந்நிகழ்விற்கு தலைமை வகித்துச் சிறப்பித்தார். கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. கீதா வரவேற்புரை வழங்கினார்.

முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டாக்டர் ஏ. கலியமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் மாணவர்கள் கல்லூரியினைத் தேர்வு செய்வது என்பது எதிர்கால வாழ்வியலைத் தேர்வு செய்வதாகும். அந்த வகையில் KPR கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இணைந்ததன் வழி நீங்கள் சமூகத்தின் முன்னுதாரணமான நிறுவனத்துடன் தங்களை இணைத்துள்ளீர்கள் என்று வாழ்த்தினார். எனவே மாணவர்கள் இவ்வாய்ப்பினைச் சரிவரப் பயன்படுத்தி எதிர்கால சாதனையாளர்களாகத் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இளைஞர்கள் தங்களது கனவினை நோக்கிப் பயணிப்பதில் இதுபோன்ற கல்வி நிலையங்களின் பங்களிப்பு அளப்பரியது எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள் போன்றோர் கல்லூரியின் உட்கட்டமைப்பு மற்றும் பணி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி உரைத்தனர். மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் முன்னிலை வகித்த 204 மாணவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகையுடன் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இக்கல்லூரியைத் தெரிவு செய்ததன் நோக்கம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

நிகழ்வின் நிறைவாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி எம் வி சாத்விகா நன்றியுரை நவின்றார். இந்நிகழ்வில் கணினி அறிவியல், நுண்ணறிவு அமைப்பு தரவு அறிவியல் மற்றும் ஆடைவடிவமைப்புப் புலங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அலுவல் நிலைப்பணியாளர்கள் என 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *