கோட்டப்பட்டி–சிட்டிலிங் சாலை பழுது: மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி முதல் சிட்டிலிங் வரை உள்ள 8.5 கிலோமீட்டர் மலைப்பாதை சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கடுமையாக சேதமடைந்து, தார்சாலை முழுமையாக அழிந்து மண்சாலையாக மாறியுள்ளது. இதனால் மலைவாழ் பழங்குடியின மக்களின் அன்றாட வாழ்வாதாரமும், அவசர மருத்துவ சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சேலம், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கும் இந்தப் பாதையில் தற்போது குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர மருத்துவ ஊர்திகள் செல்வதில் சிரமம் நிலவுவதால், மகப்பேறு கால பெண்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனமும் சீராக இயக்க முடியாததால், மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேடு–பள்ளங்கள் நிறைந்த இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாலை சீரமைப்பை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக சிட்டிலிங் மலைவாழ் மக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருப்பினும், இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வனத்துறை, தருமபுரி வனக்கோட்டம் சார்பில் ரூ.5.80 கோடி மதிப்பில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக டெண்டர் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பின்னர் அந்த டெண்டர் நிறுத்தப்பட்டதால் பணிகள் தொடங்காமல் உள்ளன. புதிய டெண்டர் அறிவிக்கப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கும் சூழல் நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மலைவாழ் பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவ வசதி இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும், தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி, புதிய டெண்டரை உடனடியாக வெளியிட்டு சாலை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.