தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
சென்னை, ஜூன் 27
14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செர்விகல் புற்றுநோய் தடுப்பு ஊசி (எச்.பி.வி.தடுப்பூசி) போடவேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் தாம்பரத்தில் மருத்துவர்கள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் (காக்ஸ்), இந்திய மருத்துவ சங்கம் தாம்பரம் கிளையின் ஆதரவோடு நடைபெற்ற இந்தபேரணியில் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவதுறை ஊழியர்கள், பொது மக்கள் பங்கேற்ஹனர்.
முன்னாள் சர்வதேச ஓட்டப்பந்தைய வீராங்கனையும், ஆசிய தடகள போட்டிகளில் பல பதக்கங்கள் வென்றவருமான காயத்ரி கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த விழிப்புணர்வு பேரணியை துவங்கிவைத்தார்.
இந்த பேரணி குறித்து காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் உமையாள் முருகேசன் கூறியதாவது:
செர்விகல் புற்றுநோய் தடுப்பு ஊசி (எச்.பி.வி. தடுப்பு ஊசி) என்பது பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காகப் போடப்படும் ஒரு முக்கியமான தடுப்பூசி ஆகும்.
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 2வது இடத்தில் உள்ளது.
‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற வைரஸ் தொற்றுதான் இந்த புற்றுநோய்க்கு முக்கிய காரணம். எச்.பி.வி. தடுப்பூசி அந்த வைரஸை அழித்து, புற்றுநோய் வராமல் 90% வரை தடுக்கிறது.
இந்தத் தடுப்பூசி பெண்களுக்கு யோனி, பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் புற்றுநோய்களையும், ஆண்களுக்கு ஆண்குறி மற்றும் தொண்டை புற்றுநோய்களையும் தடுக்க உதவுகிறது.
இந்த வைரஸ் தொற்று பாலியல் தொடர்பு மூலம் மிக எளிதாகப் பரவக்கூடியது. எனவே, வைரஸ் தொற்று உடலில் ஏற்படும் முன்பே தடுப்பூசி போடுவதன் மூலம் வாழ்நாள் முழுவதற்குமான எதிர்ப்பாற்றலை உடல் பெற்று விடுகிறது.
சிறுமிகளின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும் என்பதால், இளம் வயதில் இந்த ஊசியைப் போடும்போது அது மிகச் சிறந்த பலனைத் தருகிறது.
இந்தியாவில் இந்த நோய் பாதிப்பைக் குறைக்க 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவசமாக எச்.பி.வி. தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகக் கிடைக்கிறது.
இந்த தடுப்பூசியின் அவசியம் குறித்து இன்னும் பொதுமக்களில் பலருக்கு தெரியவில்லை. எனவே, இதுகுறித்து விளக்குவதற்காக இந்த பேரணியை மருத்துவர்கள் முன்னின்று நடத்துகிறோம்.
போலியோவை அறவே ஒழித்ததைப் போல புற்றுநோயை ஒழிக்க இந்த தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் உமையாள் முருகேசன் கூறினார்.
தாம்பரத்தில் வள்ளுவர் குருகுலம் பள்ளி வாசலில் துவங்கி மெப்ஸ் வரை நடைபெற்ற இந்த பேரணியில் காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர்கள் சங்க செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் ஸ்ரீசுதா, இந்திய மருத்துவர்கள் சங்க (ஐ.எம்.ஏ.) தாம்பரம் கிளை தலைவர் யசோதா, செயலாளர் ஹரிஹரன், பொருளாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
………………..