திருநங்கைகளின் வாழ்வியலை உயர்த்தும் விதமாக “மதிலை தாண்டு” என நிகழ்ச்சி மூலமாக உதவிக்கரம் நீட்டிய கெப்சரா பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு
நெருக்கடிகளை கடந்து சாதித்து வரும் திருநங்கைகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விருது வழங்கிய கௌரவித்த அமைச்சர் சம்பத் குமார் மற்றும் பிரபல பாடகர் வி.வி. பிரசன்னா
சவால்களுடன் பயணிக்கும் ஒவ்வொரு திருநங்கை சகோதரிகளும் சாதனையாளர்களே… எப்போது வேண்டுமானாலும் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் … திருநங்கை சமூகத்திற்கு நம்பிக்கை விதைத்த அமைச்சர் சம்பத்… !
திருநங்கைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆல்பம் வெளியிடப்படும்… தயாரிப்பு பணியில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்… – பிரபல பாடகர் வி. வி. பிரசன்னா மேடையில் வாக்குறுதி…
பொது சமூகத்தில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சவால்களை தகர்த்து சாதித்து வரும் திருநங்கைகளுக்கு விருதுகள் வழங்கி கெள்ரவப்படுத்தும் நிகழ்வாக “மதிலை தாண்டு” எனும் நிகழ்ச்சி, கெப்சரா வுண்டேஷன் சார்பாக நடைபெற்றது. கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த, “மதிலை தாண்டு” நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்தனர். தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் காணொளி காட்சியின் வாயிலாக விழாவில் வாழ்த்துரை வழங்கினார் . இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார் பேசும்பொழுது, சமூகத்தில் திருநங்கைகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர் என்றும், சவால்களை சந்தித்து சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற முயற்சிக்கின்ற எனது சகோதரிகளான திருநங்கைகள் அனைவருமே சாதனையாளர்கள் என திருநங்கைகளை ஊக்கப்படுத்தினார். தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள், திருநங்கைகளின் வாழ்வியலை மேம்படுத்த உறுதுணையாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் சம்பத், எப்பொழுது வேண்டுமானாலும் என்ன உதவி வேண்டுமானாலும் உரிமையோடு கேளுங்கள் என திருநங்கைகளிடம் அமைச்சர் சம்பத் அன்பு கட்டளையிட்டார்.
தொடர்ந்து பேசிய பின்னணி பாடகர் பிரசன்னா, சமூகத்தில் அனைவரும் அன்பை விதைக்க வேண்டும் எனவும், திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்தார். கலையின் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் பேசிய பிரசன்னா, திருநங்கைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு திருநங்கைகள் சார்ந்த ஆல்பம் ஒன்றை வெளியிடப் போவதாகவும், அதன் தயாரிப்பு பணியில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு தரப்பட இருப்பதாகவும் மேடையிலேயே தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள் மற்றும் சிறுவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரசன்னா பாடிய திரைப்பட பாடல்களை பாடி திருநங்கைகள் சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உற்சாகப்படுத்தினார்
தொடர்ந்து பேசிய கெப்சரா பவுண்டேஷன் நிறுவனரும், இந்தியாவின் முதல் பெண் மாற்றுத்திறனாளி இசையமைப்பாளருமான மேரி ஜெனிட்டா, வாழ்வாதாரத்திற்காக திருநங்கைகள் ஒருவர் கூட சாலையில் நிற்கக்கூடாது என்ற நோக்கத்திலும் திருநங்கைகள் சமூகத்தில் அனைவருக்கும் சமமான அந்தஸ்து பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மதிலை தாண்டு எனும் நிகழ்ச்சியை நடத்துவதாக தெரிவித்தார். தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தில், திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க இருப்பதாகவும், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் திருநங்கைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு உண்டான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்தார் . கல்வி பொருளாதார மேம்பாட்டில் திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் , தங்கள் கெப்சரா பவுண்டேசன் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாலமலை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் பேக்குகள் பரிசுகள் உள்ளிட்டவை வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.