கோவை, ஆலந்துறை, ஜூலை 2:
ஆலந்துறை அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி உதவியின் மூலம் புதிதாக கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் இன்று நடைபெற்ற விழாவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தை ஐ பவுண்டேஷன் ஹாஸ்பிட்டல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியபோது, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதில் தங்களது பங்களிப்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.
விழாவில் பகுதி தலைவர் கௌசிக், AST பிரஜ்வல், ACP மந்தாகினி, CPRT 101 தலைவர் ஜி.ஆர். ஹர்ஷவர்தன், CMRT 62 தலைவர் யூசுப் தரூப், CPLC 37 தலைவர் காதம்பரி தருண் குப்தா, CMLC 23 தலைவர் ரசியா யூசுப் உள்ளிட்ட நிர்வாகிகள், கல்வித் துறை அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்படுத்திய CPRT 101 தலைவர் ஜி.ஆர். ஹர்ஷவர்தன், CMRT 62 தலைவர் யூசுப் தரூப், CPLC 37 தலைவர் காதம்பரி தருண் குப்தா மற்றும் CMLC 23 தலைவர் ரசியா யூசுப் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், “கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையை உருவாக்கும்” என்று வலியுறுத்தினர்.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் இந்த புதிய வகுப்பறை கட்டிடம், பள்ளியின் அடிப்படை வசதிகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது. விழா “கல்வியால் விடுதலை” என்ற முழக்கத்துடன் உற்சாகமாக நிறைவடைந்தது.