ஒரே நாளில் 100 யூனிட் ரத்தத்தை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய இளைஞர்கள்.
வடலூர், ஜூலை. 4-
கடலூர் மாவட்டம் வடலூரில் செயல்பட்டு வரும் சுதா என்ற தனியார் மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. அறம் அறக்கட்டளை இந்திய மருத்துவர் சங்கம் கடலூர் மாவட்ட இயன்முறை மருத்துவர் சங்கம் இந்திய பல் மருத்துவர் சங்கம் இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் வடலூர் பகுதிகளில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் வருகை தந்து காலை முதலில் ரத்ததானம் செய்தனர்.
இந்த ரத்ததான முகாமில் ஒரே நாளில் 100 யூனிட்டுக்கு மேலான ரத்தம் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. மேலும் ரத்த தான முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு மருத்துவமனை சார்பாக ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் பேசிய சுதா மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சரவணன் ஆண்டுதோறும் தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் தங்கள் உடலை ஆரோக்கியத்துடன் பராமரித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் வழங்கி உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் ரத்த தானம் செய்தால் உடல் எடை குறைந்துவிடும் என்ற பிற்போக்குத்தனத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் ரத்ததானம் வழங்க வேண்டும் என கூறினார் அதனை தொடர்ந்து பேசிய அவர் தாங்கள் வழங்க ஒரு யூனிட் ரத்தம் நான்கு உயிர்களை காப்பாற்றுவதாகவும் விபத்து பிரசவகாலம் உள்ளிட்ட சூழல்களில் ரத்த தட்டுப்பாடு மருத்துவமனைகளில் ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது
எனவும் இதனை தவிர்க்க இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்தாமல் உடலை ஆரோக்கியத்துடன் வைத்து தேவைப்படும் நேரங்களில் அரசு மருத்துவமனைகளில் நேரடியாக சென்று ரத்ததானம் வழங்கும் வழக்கத்தினை வைத்துக் கொள்ள வேண்டும் என ரத்த தானத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சரவணன் மற்றும் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்