சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு குப்பையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

சீர்காழி, ஜூலை 3:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வந்து செல்கின்றனர். பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்களை அளிப்பதற்காக நேற்று வழக்கம்போல ஏராளமானோர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.


அப்போது, தாலுகா அலுவலகத்தில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால், சிலர் அலுவலகம் முன்புறம் உள்ள மறைவான பகுதிக்குச் சென்றனர். அங்கு குப்பைக் குவியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் (வண்ண அட்டைகள்) சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இந்த தகவல் அறிந்த அங்கு இருந்த பொதுமக்களும் குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகளை எடுத்து பார்த்தபோது, சிலரின் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “வாக்களிப்பதற்கும், அடையாளச் சான்றாகவும், அரசு தொடர்பான பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்துவதற்காக வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பித்திருந்தோம். ஆனால் இதுவரை பலருக்கும் அந்த அட்டைகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் தாலுகா அலுவலகம் முன்புள்ள குப்பையில் கொட்டப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காமல் காத்திருக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் முழுமையான விசாரணை நடத்தி, வாக்காளர் அடையாள அட்டைகளை குப்பையில் கொட்டியதற்கு காரணமான பணியாளர் அல்லது அதிகாரி மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *