கோவையில் உள்ள பிஎஸ்ஜி (PSG) மருத்துவமனையில், ஆண் மற்றும் பெண் கருவுறுதல் தொடர்பான அனைத்து நவீன சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் ‘பிஎஸ்ஜி ஃபெர்டிலிட்டி 360’ (PSG Fertility 360) என்ற முழுமையான கருவுறுதல் சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,குழந்தையின்மை தொடர்பான மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் கிருஷ்ணமோகன்,ஆதிலட்சுமி, பானுமதி, விஷ்னு கிராந்தி ஆகியோர் மையத்தின் சிறப்புகள் மற்றும் அதில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், தாமதமான திருமணம், மாறிவரும் வாழ்க்கை முறை, மனஅழுத்தம், உடல் பருமன், உணவுப் பழக்க மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கருவுறுதல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.
ஆண் மற்றும் பெண் இருவருக்கும் சம அளவில் பரிசோதனை மேற்கொள்வதன் அவசியத்தையும், ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சையில் ஆண்ட்ராலஜி பிரிவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து “குழந்தைச் செல்வங்கள் தாமதமாவது – சுய விருப்பமா? அல்லது காலத்தின் கட்டாயமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சியில் பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். ஜெயதீபா, பிஎஸ்ஜி மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் டாக்டர் அனுராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.