திருவாரூர்., ஜூலை.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி கரைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 74 )என்கிற விவசாயி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்.
எனது நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு மூட்டைக்கு 76 ரூபாய் லஞ்சமாக பெறப்படுவதாகவும், 35 ஏக்கருக்கு ஒவ்வொரு முறையும் ஒரு லட்சத்து 19,700 ரூபாய் லஞ்சம் வாங்குவதாகவும் கணக்கிட்டு அதனை பட்டியலிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக 40 கிலோ 600 கிராம் நெல் எடை வைப்பதற்கு பதிலாக 1,400 கிராம் கூடுதலாக 42 கிலோ வரை எடை வைக்கப்படுகிறது. இதில் 35 ரூபாய் எனவும், 40 கிலோ சிப்பம் தூத்துவதற்கும், அள்ளுவதற்கும் ஒரு சிப்பத்திற்கு பத்து ரூபாய் எனவும், மேலும் 42 கிலோ சிப்பத்திற்கு 31 ரூபாய் எனவும், மொத்தம் 76 ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது.
இதனால் 35 ஏக்கர் நிலம் வைத்துள்ள தனக்கு ஒரு லட்சத்து 19,700 ரூபாய் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டுடியுள்ளதாகவும், இது தனது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவு வங்கியில் ஒரு லட்ச ரூபாய் தான் கடன் வாங்கி உள்ளதாகவும், இவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் அந்த ஒரு லட்சம் ரூபாயை கடனை கட்டி இருப்பேன், கடனை தள்ளுபடி செய்ய கோரி இருக்க மாட்டோம்.
இந்த தொகையை லஞ்சமாக தரக்கூடிய நான் உயிர் வாழ்வது எப்படி…? கூட்டுறவு வங்கியில் வாங்கிக் கடனை கட்டுவது எப்படி…? எனவும் அந்த மனுவில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தமிழக முதல்வர் திருவாரூருக்கு வந்து கூறியதை போல ஆட்சிக்கு வந்த பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் 1 பைசா கூட லஞ்சம் வாங்க கூடாது என்று கூறினார்.
ஆனாலும் தற்போதும் லஞ்சம் வாங்கும் நிலையே தொடர்கிறது. ஒரு விவசாயி ஒரு போகத்துக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், தமிழ்நாட்டில் என்னைப்போல் எத்தனை விவசாயிகள் இருப்பார்கள்.? எவ்வளவு லஞ்ச ரூபாய் பெறப்படும்..? இந்த விஷயம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
லஞ்சத்தை ஒழிக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் சான்று வாங்க 200 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும், குருவைத் தொகுப்புக்கு 4000 ரூபாய் கொடுத்தால் அதில் 2000 ரூபாய் லஞ்சம் எடுத்துகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஒரு பக்கம் அரசு செய்வதாக கூறினாலும் மறுபக்கம் அதனை எங்களிடமிருந்து புடுங்கி விடுகிறார்கள்.இம்முறையும் மூட்டைக்கு 76 ரூபாய் லஞ்சம் பெற்றால் நான் நெல் கொள் முதல் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை.
அவ்வாறு நான் இறந்தால் அதற்கு எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத அரசும் மாவட்ட நிர்வாகமும் பொறுப்பேற்று எனது குடும்பத்திற்கு கரூரில் ரசிகர்களுக்கு கொடுத்தது போல 30 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் முன் வருவார் என நம்புகிறேன் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சின்னத்துரை கூறும் போது…. இவ்வாறு கஷ்டப்பட்டு நெல்லை விளைவித்தாலும், எங்கள் குடும்பத்தில் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இருக்கிற நகைகளை எல்லாம் அடகு வைத்து விவசாயம் செய்து விட்டு தற்போது என்ன சாதித்தீர்கள்…? இருப்பதையும் தற்போது உருவிட்டு செல்லுங்கள் என குடும்பத்தினரே பச்சையாக, கொச்சையாக பேசக்கூடிய அளவுக்கு விவசாயிகள் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
விவசாயிகளின் விவசாயிகளின் வீட்டு பெண்களுக்கு திருமணம் ஆகாமல் தவித்து வருகின்றனர்.
“அத்திப்பூ, தாமரைப்பூ, ஆயிரம் பூ பூத்தாலும், இந்த கல்யாண பூ எங்களுக்கு காலமெல்லாம் பூக்களையே…..
பெத்தவங்க நினைக்கல…
மத்தவங்க ரசிக்கல…
விவசாயி பொண்ணு விக்காத பூ என்று வீதி எல்லாம் சிரிக்கிறாங்க…
அண்ணன் பொஞ்சாதி அடுக்களையில் கொஞ்சுவதும்…
சின்னாத்தா மகள் ஒருத்தி சினிங்கி குலுங்குறதும்..பார்த்தா அடிவயிறு பத்தி எரிதல்லோ..
இருக்கட்டும் இருக்கட்டும்…விவசாய பொண்ணுக்கு வாழ்வு இல்லைன்னா,
எருக்கஞ்செடியில் பால் இருக்குது”
என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறோம் என பாடல் பாடி தனது சோகத்தை வெளிப்படுத்தினார். மேலும் விவசாயிகளின் வீட்டுப் பெண்களை திருமணம் செய்யக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
லஞ்சத்தை ஒழித்து விவசாயின் வாழ்வை ஒளிர வைக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என கண்ணீருடன் பாட்டு பாடி அரசுக்கு கோரிக்கை வைத்தார்.