மன்னார்குடியில் பரபரப்பு கொள்முதல் நிலையங்களில் தேங்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் பணியாளர்கள் அதிரடி உள்ளிருப்பு போராட்டம்!
மன்னார்குடி, ஜூலை 22 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு நகர்வு செய்யப்படாததைக் கண்டித்து, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் இன்று நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 117 கொள்முதல் மையங்களில் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.நெல் மூட்டைகள் தேக்கம் பின்னணி என்ன?டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் முறையாக அரவைக்கு அனுப்பப்படுவதில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இடநெருக்கடியுடன் தேங்கிக் கிடக்கின்றன.
இதன் காரணமாக, தற்போது கொள்முதல் நிலையங்களில் உள்ள புதிய நெல் மூட்டைகளை அந்த கிடங்குகளுக்குக் கொண்டு சென்று சேமிப்பதில் கடும் சிக்கல் நீடிப்பதாக நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.வலியுறுத்தப்படும் கோரிக்கைகள்:கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் பழைய நெல் மூட்டைகளை உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள புதிய நெல் மூட்டைகளை விரைவாகக் கிடங்குகளுக்கு நகர்த்த முடியும் என பணியாளர்களும் விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாகப் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டும், அதிகாரிகள் தரப்பில் எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, மன்னார்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் இன்று கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்கள் மற்றும் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்களின் இந்த அதிரடி போராட்டக் காரணமாக, மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 117 நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் மையங்களில் (DPC) பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லைக் கொண்டு வந்த விவசாயிகள், தங்களின் நெல் மூட்டைகளை விற்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையிலும், வெயிலிலும் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகமும் நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.