விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம்:

மரக்காணம் முதல் கண்டமங்கலம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிக்காகவும், மாமல்லபுரம்–புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 332A அமைக்கும் திட்டத்திற்காகவும் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், நிலங்களை 0 மதிப்பீடாக மாற்றி நில உரிமையாளர்களுக்கு நியாயமான தொகை வழங்காமல் அரசு செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், “மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அது சாத்தியமில்லையெனில், தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை 332A திட்டத்திற்காக, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பக்கிரிப்பாளையம், வழுதாவூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அப்போது, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் நடைமுறையில் மிகக் குறைந்த தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும், மரக்காணம், வழுதாவூர், பக்கிரிப்பாளையம், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோதும், அரசு முன்கூட்டியே உரிய அறிவிப்பு வழங்கவில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு குறைவாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஒரு ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடி வரை இருக்கும் நிலையில், அரசால் வெறும் ரூ.4 லட்சம் மட்டுமே இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண் விவசாயி ஒருவர், “எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை நம்பித்தான் எனது இரண்டு மகள்களின் திருமணத்தையும், எனது முதிய வயது வாழ்க்கையையும் திட்டமிட்டிருந்தேன். தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி வெறும் ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. எனது கணவரும் உயிரிழந்துவிட்டார். இந்தத் தொகையில் மகள்களின் திருமணத்தை எப்படி நடத்துவது? மீதமுள்ள வாழ்க்கையை எப்படி நடத்துவது?” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய விவசாயிகள் உரிமைச் சங்கத்தின் நிறுவனர் ஆர். காண்டீபன், தலைவர் ஆதி சிவா, செயலாளர் ஆர். வேல்முருகன், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் விவசாயிகள் ஆர். வசந்தகுமார், எம். சந்திரவேலு, கோபு, பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *