கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை மூலவர் பூங்காவனத்தம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர் மற்றும் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தைத் தொடர்ந்து, அம்மனுக்கு காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் “பூங்கவனத்தம்மன் தாயே” போற்றி போற்றி என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆடி வெள்ளி வழிபாட்டில் சந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். நீண்ட வரிசையில் நின்று அம்மனைத் தரிசித்து, தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாமி தரிசனம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் விஸ்வகர்மா மாகஜன சங்கம் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டு பிரசாதத்தைப் பெற்றுச் சென்றனர்.