கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில் ரூ.181.63 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
21 வார்டுகளைக் கொண்ட கள்ளக்குறிச்சி நகராட்சி, 15.87 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. நகராட்சியில் 18,490 குடியிருப்புகள் உள்ள நிலையில், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாவட்டத் தலைநகராக அறிவிக்கப்பட்ட பிறகு நகரம் வேகமாக விரிவடைந்து வருவதால், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஆனால் நகரில் உருவாகும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மழைக்காலங்களில் சாலைகளில் கழிவுநீர் தேங்கி வழிந்தோடும் நிலை நீடித்து வந்தது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தியாகதுருகம் சாலையோர கால்வாய் வழியாக கோமுகி ஆற்றிலும், வ.உ.சி. நகர், ராஜா நகர், எம்.ஜி.ஆர். நகர், கேசவலு நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சித்தேரியிலும், எம்.ஆர்.என். நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தென்கீரனூர் ஏரியிலும் கலந்ததால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து, கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.181.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் திட்டப் பணிகளுக்காக ரூ.153.86 கோடி, 10 ஆண்டுகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக ரூ.20.93 கோடி, கழிவுநீர் சேகரிப்பு அமைப்புகளின் 5 ஆண்டுகால பராமரிப்புக்காக ரூ.6.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமையில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நகரம் முழுவதும் மொத்தம் 119 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சுமார் 30 அடி இடைவெளிக்கு ஒரு மேன்ஹோல் என்ற அடிப்படையில் மொத்தம் 4,170 மேன்ஹோல்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் அடைப்புகளை நவீன இயந்திரங்கள் மூலம் விரைவாக சரிசெய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வீட்டின் முன்பும் காய்கறி கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை தனியாக பிரித்துவைத்து, கழிவுநீர் மட்டும் பாதாள சாக்கடை குழாய் வழியாக செல்லும் வகையில் இன்ஸ்பெக்ஷன் சாம்பர்களும் அமைக்கப்படுகின்றன. முதற்கட்டமாக 14,079 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், பின்னர் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, கோமுகி ஆற்றுப் பாலம் அருகேயுள்ள பழைய குப்பைக் கிடங்கு பகுதியில் பம்பிங் நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை 36 மாதங்களில் நிறைவு செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிறகு, நகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கழிவுநீர் பாதாள சாக்கடை குழாய் மூலம் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கோமுகி ஆற்றில் வெளியேற்றப்படும். இதன் மூலம் நகரில் சுகாதார வசதிகள் மேம்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.