சென்னை, எண்ணூர்:
சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் குளிக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் சென்ற கல்லூரி மாணவர்கள் குழுவில், கடல் அலையில் சிக்கிய மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அலையில் சிக்கி மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
சூரப்பட்டு வேலம்மாள் கல்லூரியில் பயிலும் ஐந்து மாணவ, மாணவிகள் இன்று காலை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரைக்கு வந்தனர். இதில் மூன்று பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தபோது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் இருவர் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, பாண்டிச்சேரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி கிருத்திகா (19) என்பவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கிருத்திகாவின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதே நேரத்தில், ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்ற மாணவர் கடல் அலையில் சிக்கி மாயமானார். அவரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர், எண்ணூர் காவல்துறையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து எண்ணூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.