வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, வானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்கள் அளிக்கவும், சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான பணிகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.4.32 லட்சம் மதிப்பீட்டில் அலுவலக வளாகத்தின் ஓரப்பகுதியில் காத்திருப்புக் கூடம் அமைக்கப்பட்டு, அதில் நாற்காலிகள், மின் விசிறிகள், மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தற்போது, போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்தக் காத்திருப்புக் கூடம் செயல்பாடின்றி காணப்படுகிறது. அங்குள்ள மின் விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் இயங்காத நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அதைப் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் அமர்வதற்கு இடமின்றி மரங்களின் நிழலில் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, செயல்பாடின்றி உள்ள காத்திருப்புக் கூடத்தை உடனடியாக சீரமைத்து, மின் வசதிகளை ஏற்படுத்தி, மின் விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.