எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா உமையாள்பதி ஊராட்சி விநாயககுடி கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி தொழிலை சார்ந்த ஏழை எளிய மக்கள். இந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுடன் வரும் நீரும் காவி நிறமாக உள்ளதால் அந்தத் தண்ணீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தால் விநியோகிக்கப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் சரியாக செயல்படுத்தப்படாததால் வாரம் ஒரு முறையே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இவர்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 2023- 2024 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ 16.75 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இணைப்புகள் கொடுக்கப்படாமல் பயனற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதனைத் தொடர்ந்து இன்று காலை தங்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி சீர்காழி திருமுல்லைவாசல் சாலையில் விநாயககுடி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி மற்றும் புதுப்பட்டினம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது.
கர்நாடகம் கை விரித்ததால் காவிரியில் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கொள்ளிடம் கூட்டுக் குடிநீரும் கிடைக்காமல் கடைமடை பகுதி மக்கள் தண்ணீருக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குடிக்க தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது