திருவாரூர். ஆக.01

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் தனியார் அரங்கத்தில் வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. எல் நினோ தாக்குதல் காரணமாக காவிரி நதிநீர் வறண்டு டெல்டாவில் குறுவை இழந்தோம், சம்பாவும் சந்தேகமே… என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில் தொடங்கிய இந்த வறட்சி மாநாட்டில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன் எல் நினோ தாக்குதலால் விவசாயிகள் அடைந்துள்ள பாதிப்புகளை நேரடியாக கற்றுக் கொள்வதற்காக தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

வழக்கமாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு டெல்டா மாவட்டம் முழுவதும் விவசாயம் செய்யப்படக் கூடிய சூழலில், இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா பாசன பகுதிகள் முழுவதும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கின்றன.

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் திருவாரூரில் இந்த வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி சிறுகுறு விவசாயிகளுக்கு 100% பெரு விவசாயிகளுக்கு 50% கூட்டுறவு கடன்களை நிபந்தனை இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய கடன் அறிவிப்பு வெளிவரும் வரை கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை இழந்த விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கர்நாடகா அரசு சட்ட விரோதமாக மேகதாட்டு அணை கட்டும் நடவடிக்கை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், சம்பா சாகுபடிக்கு உரிய தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்று வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வறட்சி மாநாட்டில் பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கூறும் போது… காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவிட்ட 3500 கன அடி நீரை 15 நாட்களுக்குள் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன.

பாஜக மற்றும் காங்கிரஸின் அரசியல் ஆதாயத்திற்காக இரட்டை நிலை எடுக்கிறார்கள். இதனால் தமிழக விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். காங்கிரசும் பாஜகவும் அரசியலுக்காக தமிழக விவசாயிகளை அழித்துவிட நினைக்கிறார்கள்.

இதனை தமிழக விவசாயிகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். உச்ச நீதிமன்றத்திற்கு நாம் செல்ல வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் செல்ல வேண்டும். தமிழ்நாடு விவசாய சங்கங்கள் செல்ல வேண்டும்.தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும் என பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *