பொள்ளாச்சி, ஆக. 2

ஆச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்த நிலையில் த.வெ.க. வினர் களமிறங்கி புதர் மண்டிய பூங்கா இடத்தை சொந்த செலவில் சுத்தப்படுத்தினர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆச்சிப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியின் 8வது வார்டுக்கு உட்பட்ட முருகன் லே அவுட்டில் சுமார் 50 சென்ட் இடம் பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்டிருந்தது. ஊராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.


இதன் காரணமாக பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் புதர் மண்டி காணப்பட்டது. இதனை சுத்தப்படுத்தி பூங்கா அமைத்துக் கொடுக்கும்படி அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் 8வது வார்டைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளான முருகேசன், முத்துலட்சுமி, பாலமுருகன் உட்பட சிலர் நேற்று அதிரடியாக பூங்கா இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து த.வெ.க. நிர்வாகி முருகேசன் கூறுகையில், ஆச்சிப்பட்டி ஊராட்சி பொள்ளாச்சி நகரத்தை ஒட்டிய பகுதி ஆகும். ஆகவே குடியிருப்புகள் அதிகரித்து, காலி மனைகள் குறைவாக உள்ளன.


இதில் 8வது வார்டுக்கு உட்பட்ட முருகன் லே அவுட்டில் மனை பிரிக்கும்போது பொது பயன்பாட்டிற்கென சுமார் 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கென பூங்கா அமைத்துக் கொடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.


ஆனால் ஆச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகமும், வடக்கு ஒன்றிய நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே இருந்து வந்தன. இதனால் பூங்கா இடத்தில் புதர் மண்டி பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகரித்தன. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகினர்.


ஆகவே த.வெ.க. சார்பில் பூங்கா இடத்தை சுத்தப்படுத்துவது என முடிவு செய்தோம். எங்கள் சொந்த செலவில் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து, புதர்களை அகற்றி மொத்த இடத்தையும் சுத்தம் செய்துள்ளோம். இதற்கு இப்பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இவ்வாறு தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *