மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மேலூர் அருகே தும்பைப் பட்டி பாலத்தின் மீது சென்ற போது டூவீலர் குறுக்கே வந்ததால் கட்டுப்பாடிழந்து கார், டூவீலர் மீது மோதிய வேகத்தில் நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர்திசையில் திருச்சியை நோக்கி சென்ற கார் மீது பயங்கர வேகத்தில் மோதி கவிழ்ந்தது.இதில் இரு கார்களும் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த காரில் பயணம் செய்த சென்னை மடிப்பாக்கத்தைச்சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரி, ரஞ்சனா ஆகிய 2 பெண்கள், ஒன்றரை வயது பெண் குழந்தை பிரணிகா உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் பயணம் செய்த 2 பேர் பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொது மக்கள், விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.