நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வளப்பாறு, ஆழியாறு, நரிமணியாறு, பிராவடையான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது ஆடிப்பெருக்குவிழா களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்து விட்டதாலும் தண்ணீர் இன்றி காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்பட்டது. திருமருகல் ஒன்றியத்தில் ஆற்று கரைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து குளத்தில் மிதக்க விட்டனர். பின்னர் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.

புதுமண தம்பதிகள் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை தண்ணீரில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர்.

மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர். அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டினர். சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர். மேலும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *