திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளி நிர்வாகம் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சந்தை மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே ரத்ததானத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ரத்ததான முகாமும் நடைபெற்றது. அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ரத்தத்தை வழங்குவதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ். சௌமியா தலைமையில், ரத்த வங்கி மருத்துவர்கள், பள்ளி தாளாளர்கள் எஸ். ரங்கநாதன், அவந்திகா மற்றும் பள்ளி முதல்வர் மலர்விழி ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள தகுதியான கொடையாளர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

ரத்ததானம் செய்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளும் வழங்கப்பட்டன. பொதுமக்களிடையே ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இம்முகாம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *