திருவாரூர்., ஆக.09

திருவாரூர் – மன்னார்குடி சாலையில், சிங்களாஞ்சேரி பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாள பகுதியை கடப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகே தேவகண்டநல்லூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் மற்றும் தேவகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த 33 நபர்களுக்கு சொந்தமான நிலம் விவசாய பயன்பாட்டுக்காக இருந்து வந்துள்ளது.

மேலும் அதே பகுதியில் விவசாயிகளுக்கு பொதுவாக நெல்லை உலர்த்தும் வகையில், விவசாய பொருட்களை காய வைக்கும் வகையில், நெல் உலர்த்தும் களமாக இந்த இடம் பயன்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த நெல் உலர்த்தும் களம் மற்றும் 33 நபர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்திலிருந்து, இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் ரயில்வே மேம்பால பணிக்காக மண் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் ஆறு அடிக்கும் மேல் மண் திருடி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தேவகண்டநல்லூர் பகுதி மக்கள் கூறும் போது.. எங்கள் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது எங்களுக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும், அதற்காக தனியாருக்கு சொந்தமான இடத்தில், யாரிடமும் அனுமதி கேட்காமல், திருட்டுத்தனமாக 500க்கும் மேற்பட்ட லாரிகளை பயன்படுத்தி மண்ணை திருடி ரயில்வே மேம்பால பணிக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.? இந்த மண் திருட்டு சம்பவம் தொடங்கிய காலத்திலிருந்து நாங்கள் கிராம நிர்வாக அலுவலர், கனிமவளத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தற்போது ஆறு அடிக்கும் மேல் மண் எடுத்து மேம்பாலப் பணி கட்டி வருகிறார்கள். எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து மண்ணை திருடி மேம்பால பணிக்கு பயன்படுத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தது …? மேம்பால பணி கட்டும் போது குவாரிகளில் இருந்து மண் எடுத்து வருவதற்கு நிதி ஒதுக்கி இருப்பார்கள்.

அந்த நிதியை பயன்படுத்தாமல் அருகில் உள்ள நிலத்திலிருந்து மண்ணை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்..? இது குறித்து நாங்கள் மேம்பால கட்டுமான நிறுவனத்திடம் கேட்டபோது… எங்கள் ஓனர் சொல்கிறார். நாங்கள் செய்கிறோம் என்கிறனர். அதிகாரிகளிடம் முறையிட்டபோது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் வீட்டு மண்ணை நாங்கள் எங்கள் வீட்டுக்கு பயன்படுத்தும் போது ஆயிரம் கேள்விகள் கேட்கும் அதிகாரிகள் தற்போது வாயை மூடிக் கொண்டிருப்பது நியாயமா..? எங்களுக்கு முறையான நீதி வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் குமுறுகின்றனர். இந்த மண் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

திருடப்பட்ட மண்ணைத்தான் இரயில்வே மேம்பாலக்கட்டுமான பணிக்கு பயன்படுத்துகிறீர்களா என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது… சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அதே இடத்தில் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *