மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணிமற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஆகஸ்ட் 10 அன்று நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
”வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கண்டன உரையாற்றினார்.
தொழிலாளர் விரோத 4 சட்டத்தொகுப்புகளை ரத்து செய்தல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக்கு உத்தரவாதம். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை மற்றும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி. பொதுத்துறை தனியார்மயமாக்கல் மற்றும் தேசிய பணமாக்கல் திட்டங்களை ரத்து செய்தல். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துதல். கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்தில் வி.ச, வி.தொ.ச மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .