22-ந் தேதி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத் திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
ஆவணி மூலத் திருவிழாவின் சிறப்பம்சமாக, சிவபெருமானின் 12 திருவிளையாடல்களை விளக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் கொடிமரம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோவில் ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், செல்லையா, மீனா, சுப்புலட்சுமி மற்றும் கோவில் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருகிற 15-ந் தேதி வரை கோவிலுக்குள் 2-ம் பிரகாரத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் திருவிளையாடல்களை உணர்த்தும் சிறப்பு அலங்காரங்கள் தொடங்குகின்றன.
திருவிழா நிகழ்ச்சிகள்:
- 16-ந் தேதி: கருங்குருவிக்கு உபதேசம்
- 17-ந் தேதி: நாரைக்கு முக்தி கொடுத்தல்
- 18-ந் தேதி: மாணிக்கம் விற்ற திருவிளையாடல்
- 19-ந் தேதி: தருமிக்கு பொற்கிழி அளித்தல்
- 20-ந் தேதி: உலவாக்கோட்டை அருளியது
- 21-ந் தேதி: பாணனுக்காக சென்று அங்கம் வெட்டுதல்; இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
- 22-ந் தேதி: காலையில் வளையல் விற்ற திருவிளையாடல் அலங்காரத்தில் வீதி உலா; இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
- 23-ந் தேதி: நரியை பரியாக்கிய திருவிளையாடல்
- 24-ந் தேதி: பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா
- 25-ந் தேதி: விறகு விற்ற திருவிளையாடல்
- 26-ந் தேதி: சட்டத்தேர் வீதி உலா; இரவு சப்தாவரண சப்பரத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தல்
- 27-ந் தேதி: தீர்த்தவாரியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவு