வடலூர்,ஆக.11-
வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அன்பர்கள் சார்பில் 12}ஆம் தேதி நடைபெறவிருந்த சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு பிரசார எழுச்சி நடைப்பயணம் தொடர்பான பேச்சு வார்த்தை, வடலூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வடலூர்ஞானபூமி உள்ள வடலூரில் மதுக்கடை, மாமிசக் கடைகளை அகற்றி, தமிழ்நாடு அரசு வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அன்பர்கள் சார்பில் வடலூர் சத்திய ஞானசபையில் இருந்து சென்னை தலைமை செயலகத்தை நோக்கி 10 நாட்கள் சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு பிரசார எழுச்சி நடைப்பயணம் 12ம் தேதி (புதன்கிழமை) காலை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் தொடர்பான அமைதிப் பேச்சு வார்த்தை வடலூர் பழைய காவல் நிலைய வளாகத்தில்உள்ள ஆய்வாளர் அறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நெய்வேலி டிஎஸ்பி., ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சன்மார்க்க சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜெய் அண்ணாமலை, பொதுச் செயலர் சாது மகாதேவன், பொருளாளர் எம்.கே.பார்த்திபன், துணைப் பொதுச்செயலர் சச்சிதானந்தம் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், 12 .8.2026 அன்று (புதன்கிழமை) வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி, வடலூரிலே பொதுக்கூட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படும். எவ்வித அமைதி போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் வடலூரில் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்படும். வடலூரில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வுப்பிரச்சார எழுச்சி நடை பயணம் செல்ல அனுமதி இல்லை. வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கூடிய பிரசாரத்தை வடலூரில் முடித்துக்கொண்டு நடைபயணமாக செல்லாமல் தங்கள் விருப்பம் போல் பேருந்து மற்றும் கார் என தங்கள் வசதிக்கு ஏற்ப பயணம் செய்து மனு கொடுக்க தடை இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட நடை பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்கத்தின் சார்பில் செய்துள்ளதால், சங்கத்தில் உள்ள அனைவரையும் கலந்து ஆலோசித்து பின்பு வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கூடிய விழிப்புணர்வுப்பிரசாரம் எந்த விதத்தில் நடத்துவது என்று கூறுவதாக சங்கத்தின் சார்பில் தெரிவித்தனர். இதையடுத்து அமைதி பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது.